மாணவர் சேர்க்கைக்காக அரசுப் பள்ளி ஆசிரியரின் அசத்தல் பிளான்!

பிள்ளைகளைச் சேர்க்கச் சொல்லி ஆசிரியர் ஒருவர் லோக்கல் சேனல்களில் விளம்பரம் பண்ண, அது பாராட்டைப் பெற்றுத் தந்திருக்கிறது.



தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க பிரியப்படாத பெற்றோர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். 'காசு செலவானாலும் தனியார் பள்ளிகள்தான் கல்வியை நன்றாகப் போதிக்கின்றன' என்று அவர்கள் நினைப்பதுதான் அதற்குக் காரணம்.

இதைப் பயன்படுத்தி, 'எங்கள் பள்ளியில் அந்த வசதி இருக்கு; இந்த வசதி இருக்கு' என்று அள்ளிவிட்டு, ஏழை பெற்றோர்களின் ரத்தத்தை அட்டைப் பூச்சியாக உறுஞ்சுகிறார்கள் தனியார் பள்ளி முதலாளிகள். இந்நிலையில், அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்கச் சொல்லி சொந்த காசில் விளம்பரம் தயாரித்து, அதை லோக்கல் சேனல்களில் ஒளிபரப்ப வைத்து ஆச்சர்யப்படுத்துகிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் பூபதி.


கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தில் இருக்கிறது பொய்யாமணி. இந்தக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர்தான் பூபதி. இவர் இங்கு பணிக்கு வந்த பிறகு, ஸ்பான்ஸர்களைப் பிடித்து, தனியார் பள்ளிகளைத் தாண்டிய பல்வேறு வசதிகளை இந்தப் பள்ளிக்கு செய்திருக்கிறார். 


ஸ்மார்ட் கிளாஸ் ரூம், இணையம் வழி கல்வி போதித்தல், பள்ளி வளாகம் முழுக்க வைஃபை வசதி, கரூர் மாவட்டத்திலேயே முதல் ஏசி வகுப்பறை, மாடித்தோட்டம், பள்ளி வளாகம் முழுக்க காய்கறித் தோட்டம், ஊர் முழுக்க மாணவர்களின் பெயர்களில் மரக்கன்று வைத்தல் என்று இவர் பள்ளியை நவீன வசதிகளோடும் இயற்கை எழிலோடும் மாற்றியிருக்கிறார்.


இதற்காக, சமீபத்தில் இந்தப் பள்ளிக்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் கிடைத்திருக்கிறது. இந்தச் சூழலில், தனியார் பள்ளிகள் மீதான மோகம் குறையாத பெற்றோர்களை ஈர்த்து, அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க வைக்க, தனது சொந்த காசைப்போட்டு விளம்பரம் தயாரித்து, அதைக் குளித்தலை பகுதி லோக்கல் சேனல்களில் ஒளிபரப்ப வைக்கிறார். 

அது மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுபற்றி, நம்மிடம் பேசிய ஆசிரியர் பூபதி, "அரசுப் பள்ளிகள் அனைத்துமே தரமானதுதான். இலவசமா கிடைக்கும் எதன் அருமையும் தெரியாது என்பார்கள். அதுபோலதான், அரசுப் பள்ளிகள் மீதான மக்களின் எண்ணமும் இருக்கு. இந்த எண்ணத்தை அடியோடு மாற்றி, அரசுப் பள்ளிகள் நோக்கி மக்களை வர வைக்கணும். அதற்கான சின்ன முயற்சிதான் இந்த விளம்பரம்" என்றார்.

Comments

  1. வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. மேன்மேலும் உயர வாழ்த்துக்கள் ஐயா. ..

    ReplyDelete
  4. Kindly send the ad video sir

    ReplyDelete

Post a Comment