அந்த 7 ஆசிரியர்கள் அர்ப்பணிப்பால் உயர்ந்த அரசுப் பள்ளி

கல்வியின் தரம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ஏழை, எளிய மக்களும் கடன் வாங்கியாவது தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்க்கின்றனர். இப்படித்தான் திருநெல் வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் தனியார் பள்ளிகள் அதிகரிப்பால், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்தது.


பள்ளிக்கு வந்தோமா.. சம்பளம் வாங்கினோமா.. என்று இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் இருக்கவில்லை. மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வழிமுறைகளை ஆராய்ந்தனர் பள்ளியின் 7 ஆசிரியர்களும். மாதந்தோறும் தங்கள் சம்பளத்தில் இருந்து தலா 2 ஆயிரம் ரூபாயை பள்ளியின் வளர்ச்சிக்கு ஒதுக்குவது என முடிவு செய்தனர். இதன் மூலம், மாதம் 14 ஆயிரம் ரூபாய் கிடைத்தது.

தொலைவில் உள்ள மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வருவதற்கான ஆட்டோ கட்டணத்தை இந்த தொகையில் இருந்து செலவழிக்கின்றனர். மழலையர் வகுப்புக்கு ஆசிரியர், குழந்தைகளை பராமரிக்கும் பணிக்கு ஒரு பெண் ஆகியோரை நியமித்து, அவர்களுக்கு ஊதியமாக தலா ரூ.3 ஆயிரம் மற்றும் ரூ.1,000 கொடுக்கின்றனர். மாணவ, மாணவிகளுக்குத் தேவையான பர்னிச்சர்கள் வாங்கினர். வீடு, வீடாகச் சென்று பெற்றோரை சந்தித்து அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்குமாறு கேட்டுக்கொண்டனர்.

இந்த முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்தது. மாணவர் சேர்க்கை படிப்படியாக அதிகரித்தது. மாணவர்களுக்கு சிறந்த கல்வியையும் சமூக சிந்தனையை யும் நல்லொழுக்கத்தையும் வளர்க்கும் பணிகளில் அந்த 7 ஆசிரியர்களும் கவ னம் செலுத்தினர்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பறைகளில் டைல்ஸ் வசதி, 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஆங்கிலவழிக் கல்வி, வெறும் சுவர்களை வண்ணயமான ஓவியச் சுவர்களாக மாற்றியது என பள்ளியின் தோற்றமும் அடிப்படை வசதிகளும் மேம்பட்டன. பள்ளியின் தரைத்தளம் தாழ்வாக இருந்ததால், மழை பெய்தால் அதனுடன் சேர்ந்து சாக்கடை நீரும் பள்ளி வளாகத் தில் தேங்கியது. அனைவருக்கும் கல்வித் திட்டம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உதவியுடன், பிரதான நுழைவு வாயில் கதவு உயர்த்தப்பட்டதுடன், 7 இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளும் அமைக்கப்பட்டன. இதனால் பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கும் பிரச்சினை தடுக்கப்பட்டது.


இதற்காக ‘ஐ கேன் ஸ்கூல் சேஞ்ச்’ என்ற அமைப்பு நடத்திய அகில இந்திய அளவிலான ‘டிசைன் ஃபார் சேஞ்ச் அவார்டு’ போட்டியில் விருது பெற்றது இப்பள்ளி. 2013-14 ல் சிறந்த சுற்றுச்சூழல் செயல்பாட்டு பள்ளிக்கான தமிழக அரசின் விருது மற்றும் ஊக்கத் தொகை ரூ.10 ஆயிரம் கிடைத்தது. ‘சுத்தம் புத்தகம் தரும்’ போட்டியிலும் வெற்றி பெற்றதற்காக ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்களை ஆட்சியர் பள்ளிக்கு அளித்தார்.

“அனைத்துக்கும் அரசின் உதவியை எதிர்பார்க்காமல், பள்ளி வளர்ச்சிக்கு தேவையானதை எங்களால் முடிந்தளவுக்குச் செய்கிறோம்” என தலைமை ஆசிரியை விஜயசுந்தரி, ஆசிரியர் குருவம்மாள் ஆகியோர் நம்மிடம் கூறினர்.

மேலும் அவர்கள் கூறும்போது, “மாணவர்களைக் கொண்டு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பள்ளி வளாகத்தில் சிறிய அளவில் காய்கறித் தோட்டம் உள்ளது. மண்புழு உரத்தை மாணவர்களே தயார் செய்கின்றனர். இங்கு விளையும் கீரைகள் சத்துணவு சமைக்க பயன்படுகிறது. வணிகர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் மூலமாக பள்ளியை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஓட்டு கட்டிடங்களை மாற்றி, புதிய கட்டிடம் அமைத்துத் தர பிடிஓ உறுதி அளித்துள்ளார்” என்கின்றனர் ஒரே குரலில்.

அர்ப்பணிப்பு உணர்வுடன் அந்த 7 ஆசிரியர்கள் செய்யும் பணி, முன்மாதிரியானது. அனைத்து ஆசிரியர்களும் பின்பற்றப்பட வேண்டியது.

Comments