பள்ளிகளில் பிரார்த்தனை கூட்டத்தை நண்பகலில் நடத்த அறிவுறுத்தல்

பள்ளிகளில் காலை வேளையில் நடைபெறும் பிரார்த்தனைக் கூட்டத்தை, நண்பகல் 11 முதல் 1 மணிக்குள்ளாக நடத்த பள்ளிகளை ஊக்குவிக்கும் முயற்சியை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் தொடங்கியுள்ளது.

சூரிய ஒளி அதிகம் இருக்கும் இந்த நேரத்தில் பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்துவதன் மூலமாக, மாணவர்கள் வைட்டமின் 'டி' ஊட்டச்சத்தை அதிகம் பெற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமான சிறுவர், சிறுமியருக்கு வைட்டமின் 'டி' குறைபாடு இருப்பது ஆய்வுகள் மூலமாக தெரியவந்ததை அடுத்து, 'தூப்' என்ற பெயரிலான இத்திட்டத்தின் மூலம் அதற்கான முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் இந்தத் திட்டத்தில், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில், புது தில்லி முனிசிபல் கவுன்சில், வடக்கு தில்லி மாநகராட்சிப் பள்ளிகள் ஆகியவை இணைந்துள்ளன. மாநகராட்சிப் பள்ளிகளில் பிரார்த்தனைக் கூட்ட நேரத்தை நண்பகலுக்கு மாற்ற அறிவுறுத்தப்படும் என்று புது தில்லி மாநகராட்சி, வடக்கு தில்லி மாநகராட்சிகள் தெரிவித்துள்ளன.

Comments

Post a Comment