AEEO பதவியைத் துறந்த கல்வி அதிகாரி! - தலைமையாசிரியராகி அசத்தும் கண்ணன்

தான் சிறப்புடன் பணியாற்றிவந்த தொடக்கக் கல்வி அலுவலர் வேலையை உதறித் தள்ளிவிட்டு, தனக்கு மிகவும் பிடித்தமான ஆசிரியர் பணியை விரும்பி ஏற்றுக்கொண்டு, ஊரையும் சுகாதாரமாக மாற்றிக் காட்டியிருக்கிறார் தலைமை ஆசிரியர் ஒருவர்.


புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமம், மாங்குடி. இங்குள்ள அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலைப்பார்ப்பவர் கண்ணன். 

இவர் தான் முன்பு பார்த்து வந்த தொடக்கக்கல்வி அலுவலர் வேலையை வேண்டாமெனக் கூறி, மாணவர்களுடனான உறவை மேம்படுத்தும் ஆசிரியர் பணியை விரும்பி ஏற்றுக்கொண்டவர். 

இவர் பள்ளியையும் அதில் படிக்கும் மாணவர்களையும் எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பதற்கு இவர் தற்போது பணிபுரியும் பள்ளியின் பெயர் பலகையே உதாரணமாகக் காட்சி தருகிறது. அதில் கண்ணன், `இது மாணவச் செல்வங்களின் கல்விப் பூங்கா.  இது ஒரு அறிவுத்திருக்கோவில்' என்று எழுதி வைத்திருக்கிறார். அவரிடம் பேசினோம். 


தலைமை ஆசிரியர் கண்ணன்பெரும் தயக்கத்துக்குப் பிறகு அவர் கூறியதாவது,``நான் மாங்குடி பள்ளித் தலைமை ஆசிரியராக வருவதற்கு முன் நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்களம் ஒன்றியத்திலும், அதன்பிறகு புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியத்திலும் உதவித் தொடக்க கல்வி அலுவலராகப் பணிபுரிந்தேன். 

உயரதிகாரியாகப் பதவி உயர்வில் சென்றாலும் என் மனசு மட்டும் மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் ஆசிரியர் பணியையே விரும்பியது. எனவே, எனது உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவியை வேண்டாமென எழுதிக் கொடுத்துவிட்டு, நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன். 

நான் மாங்குடி பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக வந்த பிறகு, மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வீடுகளுக்கே சென்று மாணவர் சேர்க்கையை நடத்தினேன். அவர்களது பெற்றோர்களை சால்வை அணிவித்துக் கௌரவித்தேன். 

இதற்கு நல்ல பலனும் கிடைத்தது. சென்ற ஆண்டில் ஆங்கில வழியில், தனியார் பள்ளிகளில் படித்துக்கொண்டிருந்த மாணவர்களும் இந்த ஆண்டு எங்கள் பள்ளியில் சேர்ந்தனர். இதனால் மாணவர் சேர்க்கை அதிகமானது. மேலும், நான் இங்கு வேலைக்கு வந்தபோது, மாங்குடி கிராமம் சுகாதாரமில்லாமல் இருந்தது.



இதனை மாற்றும் நோக்கத்தில், இந்தப் பள்ளி மாணவர்களை வைத்து ஒரு குழு அமைத்தேன். அதில் உள்ள ஒவ்வொருவருக்கும் விசில் வாங்கிக் கொடுத்தேன். அவர்கள் காலை ஐந்து மணிக்கே எழுந்து, திறந்த வெளியில் மலம் கழிக்கும் ஊர்க்காரர்கள் அருகில் நின்று விசிலடித்து விட்டுச் செல்வார்கள். 


இதனால், அக்கிராமத்தில் உள்ளவர்கள் திறந்த வெளியில் மலம் செல்வதை வெட்கப்பட்டுத் தவிர்த்து, கழிவறை உபயோகப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். இப்படி அந்த ஊர் மாணவர்களைக் கொண்டே மாங்குடி கிராமத்தில் சுகாதார விழிப்பு உணர்வை ஏற்படுத்தினோம். இந்தச் சேவையைப் பாராட்டி, கடந்த வருடம் அன்னவாசல் ஒன்றிய அலுவலகத்தின் சார்பில் எங்கள் பள்ளிக்கு விருது வழங்கப்பட்டது.

மேலும், எனக்கு இந்தக் கல்வியாண்டோடு பணி நிறைவு பெறுவதால் பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா  நடத்த விரும்பினேன். எனது எண்ணத்தைக் கிராம மக்களிடம் கூறியவுடன் அவர்கள் எனக்கு மிகுந்த ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். ஆண்டுவிழாவை மிகச்சிறப்பாக நடத்திய மனநிறைவிலும் சமூக அக்கறை நிரம்பிய மாணவர்களை இந்தப் பள்ளியில் உருவாக்கிய திருப்தியிலும் ஓய்வு பெறுவதில் எனக்கு மகிழ்ச்சிதான்" என்றார்.

Comments