காற்று மாசு அளவு, வெப்பமயமாதலை கண்டறிய உதவும்திருச்சி மாணவியின் ‘அனிதா சாட்’ விண்ணுக்கு பயணம்:


வளிமண்டலத்தில் உள்ள காற்றில் மாசு அளவு மற்றும் வெப்பமயமாதல் ஆகியவற்றைக் கண்டறிய திருச்சியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி வில்லட் ஓவியா தயாரித்துள்ள ‘அனிதா சாட்’ செயற்கைக்கோள் மெக்சிகோவில் இருந்து இன்று (மே 6) விண்ணில் ஏவப்படுகிறது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகிலுள்ள மேலகுமரேசபுரத்தைச் சேர்ந்த இவர், தனது செயற்கைக்கோள் குறித்து, ‘தி இந்து’விடம் கூறியது:

நான் 9-ம் வகுப்பு படிக்கும்போது தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற அறிவியல் போட்டியில் பங்கேற்றேன். போட்டியின் நடுவர்களான தலைசிறந்த பேராசிரியர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கேள்விகளை எதிர்கொள்ள பல்வேறு தரவுகளைச் சேகரித்தேன். அதன் அடிப்படையில்தான், காற்றில் உள்ள மாசு அளவை கண்டறிய ஒரு செயற்கைக்கோளை உருவாக்கும் எண்ணம் எழுந்தது.

இதைத் தொடர்ந்து, எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் அடிப்படையில் செயற்கைக்கோளுக்கான அடிப்படை விஷயங்களை உருவாக்கும் முயற்சியில் அதை ஓரளவுக்கு தயாரித்திருந்தேன். இதுகுறித்து அந்த நிகழ்ச்சியின் தலைவர் அக்னீஸ்வர் ஜெயபிரகாஷிடம் பகிர்ந்துகொண்டேன். அவர் எனக்குத் தேவையான உதவிகளை செய்து, கருடா ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தை அறிமுகம் செய்து வைத்தார். அந்த நிறுவனத்தைச் சேர்ந்த விமல், இந்த செயற்கைக்கோளை வளிமண்டலத்தில் ஏவுவதற்குத் தேவையான ஏரோ டைனமிக் தொழில்நுட்பங்கள், கோடிங் செய்வது உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப ஆலோசனைகளை எனக்கு வழங்கினார்.

எனது பள்ளிப் படிப்புக்கு இடையே 3 ஆண்டுகள் உழைத்து, இந்த செயற்கைக்கோளை உருவாக்கினேன். இந்த செயற்கைக்கோளில், வளிமண்டலத்தில் கலந்துள்ள கார்பன் மோனாக்சைடு, கார்பன் டை ஆக்சைடு, ஆக்ஸிஜன் உள்ளிட்டவற்றின் அளவைக் கண்டறிவதற்குத் தேவையான சென்சார் கருவிகள் உள்ளன. மேலும், அது பயணிக்கும் இடங்களைப் படம் பிடிக்க சிறிய கேமரா, செயற்கைக்கோளின் இருப்பிடத்தைக் கண்டறிய ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றையும் பொருத்தியுள்ளேன்.

செல்போன் மூலமாகவே இதை கட்டுப்படுத்தலாம். மேலும், அது அளிக்கும் தரவுகளை சேகரிக்கவும், அது அனுப்பும் படங்களைப் பார்க்கவும் முடியும். இது ஏறத்தாழ கடல் மட்டத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் உயரத்தில் பறக்க விடப்படும்.

15 செ.மீ. க்யூப் வடிவத்தில், ஏறத்தாழ 500 கிராம் எடையுடன் உள்ள இந்த செயற்கைக்கோள், ஒரு கேப்சூலில் (விண்ணுக்கு எடுத்துச் செல்ல உதவும் கருவி) வைக்கப்பட்டு ஹீலியம் பலூன் மூலம் மெக்சிகோவில் இருந்து மே 6-ம் தேதி (இன்று) வளிமண்டலத்தில் ஏவப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மெக்சிகோவில் உள்ள ஹார்வர்டு ஸ்பேஸ் சென்டர் நிறுவனம் செய்துள்ளது.

9-ம் வகுப்பு படித்தபோது பங்கேற்ற தொலைக்காட்சி போட்டி தொடர்பான நிகழ்ச்சியின்போது மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைச் சந்திக்க நேர்ந்தது. அவரிடம், எனது எண்ணத்தை தெரிவித்தவுடன் வாழ்த்து தெரிவித்தார். மேலும், நல்ல முயற்சி, நிறைய கண்டுபிடிக்க வேண்டும் எனப் பாராட்டி ஊக்கப்படுத்தினார். அதை என்னால் மறக்க முடியாது.

மருத்துவர் ஆகும் கனவுடன் நீட் தேர்வை எழுதி, அதில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து தனது உயிரை நீத்த அனிதாவின் நினைவாக, செயற்கைக்கோளுக்கு ‘அனிதா சாட்’ எனப் பெயர் வைத்துள்ளேன் என்றார்.

வில்லட் ஓவியாவின் தந்தை ஆல்பர்ட் சி.எஸ்.குமார் மும்பையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். தாய் சசிகலா மற்றும் ஒரு தங்கை உள்ளனர்..

Comments