யூபிஎஸ்சி தேர்வு: முதலிடம் பெற்றவரின் மதிப்பெண் சதவீதமே 55.6 தான்!

கடந்தஆண்டு நடத்தப்பட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வு மதிப்பெண்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) தற்போது வெளியிட்டுள்ளது. அந்தத் தேர்வு கடினமாக இருந்ததை பிரதிபலிக்கும் வகையில், முதலிடம் பெற்ற மாணவரே 55.60 சதவீத மதிப்பெண் தான் பெற்றுள்ளார்.

 ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வு 2017-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நிலையில், அந்தத் தேர்வு முடிவுகள் நிகழாண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டது. இதில் ஹைதராபாதைச் சேர்ந்த மாணவர் அனுதீப் துரிஷெட்டி (28) அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்திருந்தார்.
 இந்நிலையில், அந்தத் தேர்வை எழுதியவர்களின் மதிப்பெண்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்திய வருவாய்த்துறை அதிகாரியான அனுதீப் மொத்தமாக 1,126 மதிப்பெண்கள் (55.60 சதவீதம்) பெற்றுள்ளார். அவர் எழுத்துத் தேர்வில் 950 மதிப்பெண்களும், நேர்முகத் தேர்வில் 176 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். குடிமைப் பணிகள் தேர்வானது மொத்தமாக 2,025 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. அதில் எழுத்துத் தேர்வு 1,750 மதிப்பெண்களுக்கும், நேர்முகத் தேர்வு 275 மதிப்பெண்களுக்கும் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
 இந்நிலையில், 2-ஆம் இடம் பிடித்த அனு குமாரி 1,124 மதிப்பெண்கள் (55.50 சதவீதம்) பெற்றுள்ளார். இவர் எழுத்துத் தேர்வில் 937 மதிப்பெண்களும், நேர்முகத் தேர்வில் 187 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். 3-ஆம் இடம் பிடித்த சச்சின் குப்தா எழுத்துத் தேர்வில் 946, நேர்முகத் தேர்வில் 176 என மொத்தமாக 1,122 மதிப்பெண்கள் (55.40 சதவீதம்) பெற்றுள்ளார். மொத்தம் தேர்வாகிய 990 பேரில் (750 ஆண்கள், 240 பெண்கள்) கடைசி நபராக வந்த ஹிமாங்க்ஷி பரத்வாஜ், எழுத்துத் தேர்வில் 687, நேர்முகத் தேர்வில் 143 என மொத்தமாக 830 மதிப்பெண்கள் (40.98) பெற்றுள்ளார். கடந்த ஜூன் மாதம் இந்தத் தேர்வை மொத்தமாக 4,56,625 பேர் எழுதியது குறிப்பிடத்தக்கது

Comments