TRB கலைக்கப்படுவது முறைகேடுகளை மறைக்கவா???

"முறைகேடுகளை மறைக்கவே டி.ஆர்.பியை கலைக்கிறது அரசு!" தொடரும் குற்றச்சாட்டுகள்...


பா லிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை அடுத்து 'ஆசிரியர் தேர்வு வாரிய'த்தைக் கலைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

  நடைபெற்றுள்ள முறைகேட்டில் சில முக்கியப் புள்ளிகளுக்குத் தொடர்பிருப்பதால், அவர்களைத் தப்பிக்க வைக்கவே இவ்வாறான நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கி இருப்பதாகக் கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இதில் 1,058 இடங்களுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுதினர்.

இந்தத் தேர்வுக்கான முடிவு கடந்த நவம்பர் மாதம் வெளியானது. அப்போது தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வெளிமாநில மாணவர்கள் பணிவாய்ப்பு பெற்றுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்தத் தகவல் தமிழக உயர்கல்வித்துறையையே அதிரவைத்தது. தேர்வு முடிவுக்கான மதிப்பெண்களில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தேர்வு எழுதியவர்களிடமிருந்து புகார் மனுக்கள் குவிந்தன. இதனைத் தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டமுடிவுகள் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட மதிப்பெண்களை தேர்வு எழுதியவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது மதிப்பெண்கள்மாறியிருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்தே இந்தத்தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது அம்பலமானது. மதிப்பெண்களை மாற்றப்பட்டதில், கணினி ஆபரேட்டர்கள், உயர் அதிகாரிகள், அமைச்சர் எனப் பலருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. இப்படி பூதாகரமாக மாறிய இந்த விவகாரத்தில், விசாரணை நடைபெற்று வருகின்ற சூழலில், ஆசிரியர் தேர்வு வாரியத்தையே கலைக்க அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளன. அதோடு கலைக்கப்பட்டவுடன் அந்தஅமைப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துடன் இணைக்கவும் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு நெட், ஸ்லெட் அமைப்பின் ஆலோசகர் நாகராஜன் பேசுகையில், ''ஆசிரியர் தேர்வு வாரியத்தைக் கலைக்கப் போவதாகத் தகவல் வெளியாகி இருப்பது உண்மைதான். கலைத்துவிட்டு தமிழ்நாடு தேர்வாணையத்துடன் இணைக்கப்போவதாகத் தெரிகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடந்துள்ள முறைகேடுகளை இருந்த இடம் தெரியாமல் அழிக்கவே இந்த முடிவை எடுத்துள்ளது அரசு.

அமைச்சர் முதல் அட்டெண்டர் வரை பலருக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது.ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உள்ள ஊழியர்களை மாற்றிவிட்டால், இதில் தொடர்புடையவர்களை எவ்வாறு விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருவார்கள்? டி.என்.பி.எஸ்.சி-யில் இணைப்பது ஆரோக்கியமானது என்றாலும், சில நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. அதையெல்லாம் இந்த அரசாங்கம் எப்படிக் கையாளப் போகிறது? நடந்த முறைகேட்டை எவ்வாறு விசாரிக்கப் போகிறது? எனவே இதில் தொடர்புடையக் குற்றவாளிகளைப் பிடித்துவிட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தை எதில் வேண்டுமானாலும் இணைக்கட்டும். இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டும். அதனால் இந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட வேண்டும்" என்றார்.சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் புகார் தெரிவித்தவருமான சுனில் ராஜா பேசுகையில், "இந்த முறைகேடு தொடர்பாக முதன் முறையாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தில் புகார் தெரிவித்திருந்தேன். இந்த முறைகேட்டில் இருநூறுக்கும் மேற்பட்டவர்களுக்குத் தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது. தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தை டி.என்.பி.எஸ்.சி-க்கு மாற்றும் முயற்சியின் மூலம் இந்த வழக்கு நேர்மையாக நடைபெறவில்லை என்பது தெளிவாகியுள்ளது. இதில் முக்கியப் புள்ளிகளுக்குத் தொடர்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அவர்கள் யாரும் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்படவில்லை.

இந்த முறைகேட்டை கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் செய்ய வாய்ப்பில்லை.முக்கிய அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பின்புலமாகக் கொண்டவர்கள் மட்டுமே இதனைச் செய்ய முடியும். ஆனால், அவர்களை எல்லாம் விசாரிக்காமல், கால்டாக்சி டிரைவரைப் பிடித்ததாகக் கண்துடைப்பு செய்கிறார்கள். அதேபோன்று கடந்த மூன்று மாதத்தில் இத்துறையில் முக்கியப் பொறுப்புகளில் இருந்துவந்த அதிகாரிகளையும் மாற்றி வருகிறார்கள். மிக வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்த முறைகேட்டை முற்றிலுமாக நீர்த்துப்போகச் செய்யவே இவ்வாறான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

கல்வித்துறை சம்பந்தப்பட்ட ஒரு அலுவலகத்தை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றினாலே பல குழப்பங்கள் இருக்கும். அப்படி இருக்கும்போது ஒரு துறையையே மாற்றுகிறார்கள் என்றால், எப்படியானக் குழப்பங்கள் இருக்கப் போகிறதோ.... இதனால் பாதிக்கப்படுவது அப்பாவியான மாணவர்கள் தான்'' என்றார் கவலையுடன்.

Comments