அமைச்சர் செங்கோட்டையனுடன் பேச்சுவார்த்தை: சென்னையில் நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்




சென்னையில் 4 நான்கு நாட்களாக நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர் உறுதி அளித்ததை தொடர்ந்து தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

ஊதிய முரண்பாடுகளை நீக்கக்கோரி சென்னையில் 2000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 4வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உணவு, குடிநீர் இல்லாததால் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2009ம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்த தொடக்ககல்வி ஆசிரியர்கள் 2000க்கும் மேற்பட்டோர் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

2009ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்பு பணிக்கு சேர்ந்தவர்களை விட அதற்கு பின்னர் சேர்ந்தவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை குறைவான சம்பளமே கிடைப்பதாக இடைநிலை ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒரே கல்வி தகுதியுடன் ஒரே பணியை செய்து வரும் நிலையில் ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் செங்கோட்டையனுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Comments