அரசுப் பள்ளிக்கு உதவிய மறைந்த ஆசிரியர் குடும்பத்துக்குச் சமூக ஊடகம் மூலம் திரட்டப்பட்ட நிதி!


அரசுப் பள்ளிகளில், மாணவர்களுக்குப் புதிய வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என முயற்சி எடுக்கும் அநேக ஆசிரியர்களின் நினைவில் வரும் முதல் பெயர் ஜெயா வெங்கட். அந்தளவுக்குப் பிறருக்கு உதவுவதில் முதல் நபராக நின்றவர். அவர் ஒரு தொழிலதிபரா... பெரும் வசதிபடைத்தவரோ அல்ல. காஞ்சிபுரம் மாவட்டம், உமையாள்பரணச்சேரி அரசு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றிவர்தான் ஜெயா வெங்கட்.

ஜெயா வெங்கட்தான் பணிபுரியும் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்குத் தேவையானவற்றை வாங்குவதில் முனைப்போடு செயல்பட்டவர். அந்தக் குணமே தம் பள்ளிபோல மற்ற பள்ளிகளுக்கு உதவ வேண்டும் எனும் நிலையை அவருக்குள் உருவாக்கியது. அதற்காகவே `சென்னை சிறுதுளி' எனும் அமைப்பை உருவாக்கினார். அதன் மூலம், தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருக்கும் அரசுப் பள்ளிக்கும் ஏதேனும் உதவி என்ற நிலையைப் பற்றி அவருக்குத் தெரியவந்தால், உடனே உதவத் தயாராவார். இப்போதும் நீங்கள் முகநூலில் ஜெயா வெங்க்ட் எனும் பெயரைத் தேடிப்பாருங்கள். அதில், ஏராளமான பள்ளிகளிலிருந்து அவர் உதவியதற்கு நன்றி தெரிவிக்கும் பதிவுகளைப் பார்க்க முடியும். அவற்றில், சேக்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் பதிவு இது.

``எங்கள் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பங்கேற்றுச் சிறப்பித்த சர்.சி.வி. ராமன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய இளம் வேளாண் விஞ்ஞானிகளைப் பாராட்டவும் ஊக்கப்படுத்தவும்  திரு. ஜெயா வெங்கட் சார் அவர்கள் இளம் வேளாண் விஞ்ஞானிகளுக்கு 40 மெடல்கள் மற்றும் காடுகள், தோட்டத்தில் வீடுகள் அமைத்துப் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவ மாணவிகளுக்கு 38 மழையங்கி வழங்கி மழைக்காலப் பாதுகாப்பான வருகைக்கு உதவி செய்து சிறப்பித்துள்ளார்கள். அவர்களுக்குப் பள்ளி சார்பிலும் சர்.சி.வி. ராமன் தொழில்நுட்ப மைய இளம் வேளாண்மை விஞ்ஞானிகள் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி.
 - ராஜாராம். ஜி"

மாணவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஜெயா வெங்கட், தனது பள்ளியின் மாணவர்களோடு, மார்ச் மாதம் 24-ம் தேதி சென்னைக்குச் சுற்றுலா சென்றார். மாணவர்களுடன் உற்சாகமாகப் புறப்பட்டதை வீடியோ எடுத்து தனது முகநூலில் பதிவும் செய்தார்.

 அப்போது, திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவால் எதிர்பாராத வண்ணம் மரணமடைந்தார். அவருக்கு பத்து வயதில் ஒரு மகனும், இரண்டரை வயதில் ஒரு மகளும் உள்ளனர். இது சக ஆசிரியர்களுக்குப் பேரதிர்ச்சியைத் தந்தது. அவரின் இறுதி அஞ்சலிக்குப் பல ஊர்களிலிருந்து ஆசிரியர்கள் வந்திருந்தார்கள். மேலும், தங்கள் ஊர்களிலும் ஜெயா வெங்கட் ஆசிரியருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். அரசுப் பள்ளிக்கு ஓடி, ஓடி உதவி செய்தவரின் குடும்பத்துக்குத் தங்களால் இயன்ற பொருளாதார உதவியைச் செய்ய திட்டமிட்டனர்.

பத்து ஆசிரியர்கள் கொண்ட குழு முகநூல் மற்றும் வாட்ஸ் அப் மூலம் சக ஆசிரியர்களிடம், ஜெயா வெங்கட் குடும்பத்தினருக்கு உதவும்படி கோரிக்கை வைத்தனர். பலரும் உதவ முன் வந்தார்கள். அப்படிச் சேர்ந்த தொகையை இன்று ஜெயா வெங்கட்டின் மனைவியிடம் சேர்ப்பித்திருக்கிறார்கள். "இன்று வரை (ஏப்ரல் 9 காலை) 3 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வந்திருந்ததை, ஜெயா வெங்கட்டின் மகள் யாழினியின் பெயரில் 2 லட்சமும், மகன் ஹரேனின் பெயரில் லட்சத்து 56 ஆயிரம் ரூபாயும் வைப்பு நிதியாக அஞ்சல் நிலையத்தில் செலுத்தினோம்" என்றார் நிதி சேகரிப்புக் குழுவில் உள்ள ஆசிரியர்.

ஆசிரியர் ஜெயா வெங்கட் மனைவி அனிதா (வைப்பு நிதி ரசீதைப் பெற்றுக்கொள்பவர்) , ``என் கணவர் இருந்து செய்ய வேண்டியதை அவரின் நண்பர்கள் எங்கள் பிள்ளைகளுக்குச் செய்திருக்கிறார்கள். இப்படியான நண்பர்களை அவர் சம்பாதிருப்பது பெரிய விஷயம். உதவிய எல்லோருக்கும் நன்றி" என நெகிழ்ச்சியாகக் கூறினார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவுவதையே தம் லட்சியமாகக் கொண்ட ஆசிரியர் ஜெயா வெங்கட்டின் விருப்பத்த நிறைவேற்றுவதன் மூலம் அவரைச் சிறப்பாக நினைவுகூர முடியும்.

Comments