பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு: ஏப்.24-இல் விடைத்தாள் திருத்தும் பணி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வெள்ளிக்கிழமை நிறைவடைந்ததையடுத்து ஏப்.24-ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கவுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் 2017-2018-ஆம் கல்வி ஆண்டுக்கான அரசு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 16-ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 3,603 மையங்களில் 10 லட்சத்து 1,140 மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர். குறைந்தபட்சம் 3 நாள்கள் முதல் 6 நாள்கள் வரை இடைவெளியுடன் தேர்வுகள் நடத்தப்பட்டன. பிரதான பாடங்களில் கணிதத் தேர்வு எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கடினமாக இருந்ததாகவும் இந்த ஆண்டு சென்டம் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர். கணிதத் தேர்வைத் தொடர்ந்து நடந்த அறிவியல் தேர்வு ஓரளவுக்கு எளிதாக இருந்தபோதும் சில ஒரு மதிப்பெண், இரு மதிப்பெண் வினாக்கள் மறைமுக வினாக்களாக இடம்பெற்றிருந்தன. இறுதியாக வெள்ளிக்கிழமை (ஏப்.20) நடைபெற்ற சமூக அறிவியல் தேர்வு பிற பாடங்களைக் காட்டிலும் எளிதாக இருந்ததாக மாணவர்கள் கூறினர். ஏப்ரல் 24 முதல்...பத்தாம் வகுப்புக்கு அனைத்துத் தேர்வுகளும் முடிவடைந்த நிலையில், 67 கல்வி மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் செவ்வாய்க்கிழமை (ஏப்.24) முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கும். முன்னதாக மையங்களின் முகாம் அலுவலர்கள் கடந்த 17-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டனர். விடைகள் தொடர்பான பட்டியல்வரும் 23-ஆம் தேதி விநியோகம் செய்யப்படும். விடைத்தாள் திருத்தும் முதல் நாளில் தமிழ், ஆங்கிலம்,கணிதம் ஆகிய பாடங்களுக்கு முதன்மைத் தேர்வர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடுவர்.

 இதையடுத்து ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் மே 7-ஆம் தேதி வரை தமிழ், ஆங்கிலம், கணிதப் பாடங்களில் உதவி தேர்வர்கள் விடைத்தாள் திருதும் பணிகளை மேற்கொள்வர்.ஏப்ரல் 26-இல் அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்குமுதன்மைத் தேர்வர்கள் விடைத்தாள் திருத்தப் பணிகளை மேற்கொள்வர். ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் மே 7-ஆம் தேதிவரை அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு உதவித் தேர்வர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொள்வர் . ஏற்கெனவே அறிவியல், சமூக அறிவியல் விடைத்தாள் திருத்த தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டு இந்தப் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Comments