ஆதார் தகவல்களை எப்பொழுதும் யாராலும் திருட முடியாது! ஆதார் அடையாள அட்டை வழங்கும் ஆணையம் உறுதி..

'ஆதார் தகவல்களை திருடுவதற்கு, ஒரு யுகமானாலும், யாராலும் முடியாது' என, ஆதார் அடையாள அட்டை வழங்கும் ஆணையம்  தெரிவித்துள்ளது.


ஆதார் வழக்கு தொடர்பான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆதார் அடையாள அட்டை வழங்கும் ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, அஜய் பூஷண் பாண்டே நேற்று ஆஜராகி, 'பவர் பாய்ன்ட்' தொழில்நுட்ப உதவியுடன் விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

ஆதார் அட்டையில் பெறப்பட்டுள்ள தகவல்கள் மிகவும் பாதுகாப்பானவை. இவை, இணையதளத்துடன் இணைக்கப்படவில்லை. இந்த தகவல்கள் கசிய வாய்ப்பில்லை. அரசின் சலுகைகள், மானியங்கள், ஒருவருக்கு கூட மறுக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, ஆதார் திட்டம் அமல் படுத்தப்பட்டது.

தேசிய அளவில், ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு அடையாள அட்டையாக, ஆதார் உள்ளது. ஆதாரில் பெறப்பட்டுள்ள தகவல்கள், மிகவும் பாதுகாப்பானவை. இவற்றை திருடுவதற்கு, ஒரு யுகமானாலும், யாராலும் முடியாது. வங்கிகளுக்கு, ஆதாரில் பெறப்பட்டுள்ள விரல் ரேகை, கருவிழி அடையாளங்கள் வழங்கப்படவில்லை.

ஆதார் அட்டையில் பெறப்பட்டுள்ள விரல் ரேகை ஒத்துப் போகாததால், சிலருக்கு சலுகைகள் மறுக்கப்படுவதாக, தகவல்கள் வந்துள்ளளன. விரல் ரேகை ஒத்து போகாவிட்டால், வேறு அடையாளங்களை வைத்து, வழங்க வேணடும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்.

Comments