தமிழக பட்ஜெட்டில் கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் முக்கியத்துவம் உண்டா?

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மூலம், பள்ளிக்கல்வி துறைக்கும் உயர்கல்வித் துறைக்கும் சேர்த்து 31,825 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதைவிட கல்வித் துறைக்கு அதிக அளவில் ஒதுக்கீடு செய்திருந்தாலும்,

புதிய திட்டங்கள் குறித்து அறிவிப்பு ஏதுமில்லை. பல பிரிவுகளில் ஏற்கெனவே செயல்பட்டுவரும் திட்டங்களுக்கு, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ஒவ்வொரு துறையின் சார்பிலும் கல்விக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்திருக்கிறது தமிழக அரசு என்பது குறித்த விவரங்கள் விரிவாக அலசப்பட்டுள்ளன.

பள்ளிக்கல்வித் துறை

2018-2019 நிதியாண்டுக்கு, பள்ளிக்கல்வித் துறைக்கு 27,205.88 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், `குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை’த் திறம்படச் செயல்படுத்திட, 200.70 கோடி ரூபாயும், பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த 333.36 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நபார்டு வங்கி உதவியுடன், 200 கோடி ரூபாய் செலவில் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. `கடந்த நிதி ஆண்டில், பள்ளிகளில் உள்ள கழிவறைகளை தூய்மையாகவும் சுகாதாரத்துடனும் பராமரிப்பதற்காக, உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் 54.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், வரும் நிதியாண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்' என்று அறிவித்துள்ளது தமிழக அரசு.

மாணவ-மாணவியருக்கு நான்கு இணை சீருடைகள், புத்தகப் பைகள், காலணிகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் வடிவியல் பெட்டிகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள், மிதிவண்டிகள் மற்றும் பேருந்துக் கட்டணச் சலுகைகளுக்காக மட்டும் 1,653.89 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பத்து, பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக தலா 5,000 ரூபாய் வழங்கப்பட்டுவருகிறது. இந்தத் திட்டத்துக்காக, அடுத்த நிதியாண்டுக்கு 313.58 கோடி ரூபாயும், பள்ளி மாணவ-மாணவியருக்கு மடிக்கணினி வழங்குவதற்கு 758 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உயர்கல்வித் துறை

2018-2019ம் ஆண்டில் உயர்கல்வித் துறைக்காக 4,620.20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவ-மாணவிகளுக்கு கல்விக் கட்டணத்தை அரசே திரும்ப வழங்கும் திட்டத்துக்காக 682.87 கோடி ரூபாயும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு 250 கோடி ரூபாய் உள்பட, அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் 500.65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில், கும்பகோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியின் விக்டோரியா விடுதி மற்றும் ராணி மேரி கல்லூரியில் உள்ள பாரம்பர்யமிக்கக் கட்டடங்களைப் புதுப்பிக்க 26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புத் துறை

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கத்துக்கு 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம், கூடுதலாக இரண்டு லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்படுள்ளது. மேலும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகைக்காக 31.01 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

`தமிழக அரசு நடத்திவரும் 88 தொழிற்பயிற்சி நிறுவனங்களில் 26 தொழிற்பயிற்சி நிறுவனங்களை, 126 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்படும்' என்றும், `தொழிற்பயிற்சி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், 20 தொழிற்பயிற்சி நிறுவனங்களில் 38 கோடி ரூபாய் செலவில் மருத்துவ மின்னணுவியல், இயந்திரவியல், கருவியியல் மற்றும் அச்சு உருவாக்கம், மின்னணுவியல் மற்றும் கட்டட வடிவமைப்பு ஆகிய புதிய தொழிற்பிரிவுகள் தொடங்கப்படும்' என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை

`சர்வதேச அளவில் தமிழ்மொழி மற்றும் பண்பாட்டைப் பாதுகாத்துப் பரப்புவதற்காக, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி விரிவாக்க மையம் உருவாக்கப்படும். இந்த மையத்துக்கு, ஒவ்வோர் ஆண்டும் மானியமாக இரண்டு கோடி ரூபாயை அரசு வழங்கும்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்விக்கான ஒதுக்கீடு

இந்த பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க விஷயம், `மருத்துவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும்வகையில் திருநெல்வேலி, மதுரை, கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டப்படிப்புக்கான 345 புதிய இடங்கள் உருவாக்கப்படும்' என அறிவித்துள்ளது தமிழக அரசு.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடுத் துறை

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு 191.18 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டில், `தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் 13.12 கோடி ரூபாய் செலவில், விளையாட்டு உயிரி இயந்திரவியலுக்கான (Sports Biomechanics) சிறப்பு மையத்தை அரசு உருவாக்கும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்

விடுதிகளுக்கான கட்டடங்கள் கட்ட 32.20 கோடி ரூபாயும், உணவுக் கட்டணங்களுக்காக 118.48 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில், `2018-2019ம் ஆண்டில், 46 கோடி ரூபாய் செலவில் 19 விடுதிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும்' என்கிறது தமிழக அரசு. பள்ளிக்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 129.16 கோடி ரூபாயும், உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 1,838.24 கோடி ரூபாயும்,  விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்துக்காக 71.01 கோடி ரூபாயும், மத்திய சிறப்பு உதவித் திட்டத்துக்காக 150 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்  நலத் துறை

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறைக்காக 972.86 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ-மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்க 229.98 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளுக்கு விடுதிகள் கட்டுவதற்காக 20.10 கோடி ரூபாயும், உணவுக் கட்டணத்துக்காக 80.37 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசு பல்வேறு திட்டங்களுக்கு நிறைய ஒதுக்கீடு செய்திருந்தாலும், இந்தத் திட்டங்கள் எப்போது செயல்படுத்தப்படும் என்பதும், அதன்மூலம் எவ்வளவு மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்பதும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும்.

Comments