பிளஸ்-1 கணித தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படுமா?

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் கணித தேர்வு நடைபெற்றது. மாணவ-மாணவிகள் வினாத்தாளை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.

வினாக்கள் அவர்கள் படித்ததாகவோ, எதிர்பார்த்ததாகவோ இல்லை. இதனால் மாணவர்கள் மிகவும் சிரமபட்டு தேர்வு எழுதினார்கள்.தேர்வு எழுதிய மாணவிகள் பலர் அழுதுகொண்டே வெளியே வந்தனர். தேர்ச்சி பெறுவோமா? என்பதே சந்தேகமாக இருப்பதாக மாணவர்கள் சிலர் தெரிவித்தனர். கருணை மதிப்பெண் வழங்கினால் தான் தேர்ச்சி அடைய முடியும் என்றும் மாணவர்கள் கூறினார்கள்.

பிளஸ்-1 கணித தேர்வு கடினமாக இருந்ததால் கருணை மதிப்பெண் வழங்கப்படுமா? என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-கேள்விகள் சரியாகத்தான் கேட்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் கூறுகிறார்கள். பிளஸ்-1 தேர்வில் கணித பாடத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் சிக்கல் இருக்காது. 90-க்கு 90 மதிப்பெண்கள் எடுப்பது தான் சிரமம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments